தமிழ் அக்கா அன்பை அள்ளித் தந்த இனிப்பிலிருந்து இனிதாயும் இனிப்பாயும் தொடங்கியது நேற்று மதியம்....
50 நாட்களுக்குப்பின் சொந்த ஊர்..பரபரப்புடனும் மகிழ்ச்சியுடனும் புகைவண்டி நிலையம் வந்தாயிற்று..
திருநெல்வேலி-திருச்சிராப்பள்ளி
குளிச்சியான நீர் இதமாக தொண்டை நனைத்து குதூகலாய் தொடங்கியது பயணம்..
எப்பொழுதும் அந்த சாளரமோரம்,அந்த ஒற்றை இருக்கைதான்....😀
குட்டி ராஜ நித்திரைக்கு பின் கண்கள் விருந்துக்கு தயாரானது...
வாஞ்சி மணியாச்சியை கடக்கும் போதெல்லாம்,வாஞ்சி ,ஆஷ்சை சுட்ட கற்பனைக்காட்சி மூளையை முட்டும்...
"ஆவாரை பூத்திருந்தால் சாவாரைக் காண்பீரோ".. வறட்சியிலும் வளமாய் வளர்வது ஆவாரையும் தான்....தங்க பூக்கள் போர்த்தி நிலத்தில் நித்திரைக் கொண்டிருந்தன...
எத்துணை முறை கடந்திருந்தாலும் அத்துணை முறையும் பயம்தான் அந்த பாலத்தைக் கடக்கும்போது...
முழுதும் பச்சைதான்...ஆனால் அந்த பாலாய் போன கருவேள மரங்கள் தான்...ஒரே ஆறுதல் ஆங்காங்கே வெட்டி வீழ்த்தப்பட்டிருந்த அதே மரங்கள்தான்...
அடர்ந்த வான வண்ணத்தில் அந்த ஒற்றை மரத்தின் உச்சிக்கிளையில் வீற்றிருந்த ஓய்யார பறவை ..
ரயில் போகும்போது கையசைக்கும் அந்த மழலைகள் என்றும் அழகுதான்...அதிலும் அந்த மழலைகள்...கையில் காகிதப்பூவோடு அசைத்த அந்த பிஞ்சு கைகள்...பூவுக்கும் வாசனை சேர்த்த அந்தக் காற்று அழகாய் எனை அடைத்தது...பறக்கும் முத்தங்கள் தருவதெல்லாம்,அந்த முத்தத்தின் ஈரத்தென்றல் சத்தியமாய் அவர்களின் கண்ணம் தீண்டும் என்ற அசட்டு நம்பிக்கைதான் எனக்கும்...
பூந்தோட்டம்,காகிதப் பூக்களின் அணிவரிசை...பயணத்தை இனிமையாக்க...
திருப்பரங்குன்றம் மலை பார்க்கும்போதெல்லாம் அந்த குட்டி குண்டு அழகன் சொன்னது முகுளத்திலிருந்து வெளிவரும்..அதே யானை .அதே கண்...
வைகை பாலத்தைத் தாண்டும் போதெல்லாம்,கதையில் படித்தவை,பிறர் சொல்லக்கேட்ட காட்சியெல்லாம் நினைக்கும்போது நிச்சயம் அதிர்ச்சியாய்தான் இருக்கும்...
சிறிது நேரத்தில் கொடைக்கானல் மலை வரிசை...பனிப்போர்த்திய மலை..இதமான அந்தி மாலை..இதழ் நனைத்த தேனீர்...நெஞ்சம் நிறைத்த கணங்கள்....
அந்த மலை ,சேய் சுமந்த தாய் பிரசவித்தல் போன்றும்,அடுத்து ஒரு குழந்தை கவிழ்ந்து படுத்திருப்பது போன்றும் அழகாய் அணைக்கும்...
குட்டி குட்டி பறவைகளும்,பட்டாம்பூச்சிகளும் கொக்குகளும்,நாரைகளும்,அழகு காகங்களும் வீடு செல்லும்,அவர்களெல்லாம் பறந்து,நான் அந்த அழகில் கரைந்து...
பூப்போர்த்தியும்,நிர்வாணமாயும் பல மரங்களும்,குன்றுகளும்...அதிலும் இரண்டு குன்றுகளின் நடுவில் அகல் போன்ற ஒரு பாறை...அந்த அந்தியில்,அதில் பனி நிரப்பி,அந்த இரண்டு விண்மீன்களை போட்டு ஏற்றி விடலாம் என்றெல்லாம்...ஆயிரம் எண்ணங்கள்...
சில மனிதர்கள் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும்...ஆம்,அதே அன்பர்..வெள்ளைத்தாள் அட்டைப்போட்ட புத்தகத்துடன்...இருவருக்கும் பொறித்தட்ட நலம் விசாரித்து கொண்டோம்...ஒரு கணத்தில்,அவர் புத்தகத்தைக் கொடுத்து ஒரு பகுதியை வாசிக்க சொன்னார்..."ஒரு மருத்துவ மாணவனைப் பற்றியது" அந்த பத்தி...அதில்"ஆழமாய் விதைத்த ஒன்றுதான் இன்று மரமாய் நிற்கிறது "என்றிருந்தது..
காவிரி காற்றுப்பட்டதும் இனம் புரியா புத்துணர்வும்,ஆனந்தமும்...இருட்டிலும் அந்த அல்லிக்குளத்தைத் தேடாமலில்லை...
குட்டி நாய் ஒன்று வீட்டில் உறுப்பினராய் சேர்ந்திருந்தது...எனக்காய் காத்திருந்து,அனைவரும் சேர்ந்து உண்டு மகிழ்ந்தோம்...
நாம் நல்லது செய்யும் போது யார் ஊக்குவிக்கிறார்களோ, நாம் தவறு செய்யும்போது யார் கண்டிக்கிறார்களோ அவர்கள்தான் என்று ஒரு குரு போத்திதிருந்தார் ....ம்ம்..நம் அருகில் இருக்கும் பல ஜீவன்கள்தான் கடவுள் போல..
நாம் அன்பு செய்வதற்க்கும் ,நம்மை அன்பு செய்வதற்க்கும் இங்கு கோடி கோடி ஜீவன்கள் இருக்கிறார்கள்....ஆம்..அன்பு சூழ் உலகு.....

No comments:
Post a Comment